Sunday, 18 July 2010 20:25
| < Prev | Next > |
|---|

சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் ஒரு மர்ம குகை உள்ளதை அமெரிக்க மாணவர்கள் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் செவ்வாய் நான்காமிடத்தில் உள்ளது.
சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இக்கிரகத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அனுப்பியுள்ள ஒரு விண்கலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், "செவ்வாய் கிரக விண்வெளிக்கு விமான வசதி' என்ற செவ்வாய்கிரகம் குறித்து மாணவர்களின் கற்பனை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது.
இந்த வகையில் ஆய்வு மேற்கொண்டதில், "மார்டெய்ன் ஸ்கைலைட்' என்ற செவ்வாய்கிரகத்தின் கூரையில் ஒரு துளை போல் குகை இருந்ததை கலிபோர்னியா மாநிலம், காட்டன்வுட்டில் உள்ள எவர்கிரீன் நடுநிலை பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு அறிவியல் மாணவர்கள் 16 பேர் கொண்ட குழு கண்டுபிடித்துள்ளது.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, கடந்த 2007ம் ஆண்டு, அமெரிக்க புதைபடிவு சர்வே விஞ்ஞானி கிளன் குஷ்ஷிங் செவ்வாய் கிரகத்தில் செய்த ஆய்வுக்கு இணையாக கருதப்படுகிறது. "செவ்வாய் கிரகத்தில் காணப்படும் மர்ம குகை தோற்றம், ஒரு எரிமலையின் வாயாகவோ அல்லது ஒரு குகையின் சிறிய துளையாகவோ அல்லது லாவா குழம்பு வெளியேறியதால் உருவான குழாய் போன்ற அமைப்பாகவோ இருக்கலாம்' என்று குஷ்ஷிங் கருத்து தெரிவித்திருந்தார்.
மாணவர்களின் கண்டுபிடிப்பு குறித்து, அக்குழுவின் தலைவர் ஆசிரியர் மிட்சல் கூறியதாவது: "செவ்வாய் கிரகத்தில் எரிமலைகள் வெடித்து சிதறியபோது, அதில் இருந்து வெளிப்பட்ட லாவா குழம்பு, பாறையாக மாறியுள்ளது. இதனால் அதன் உட்பரப்பில் குகை போன்ற அமைப்பு தோன்றியுள்ளது. குகையின் மேற்பரப்பில் குளிர்ச்சியான பொருள் படிந்துள்ளது.
அறிவியல் சமூகத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் எளிதாக அறித்து கொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த திட்டம் உதவி உள்ளது. மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான அனுபவம்' இவ்வாறு கூறியுள்ளார்.
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy