Tuesday, 22 May 2012 10:03
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது 3வது ஆண்டை பூர்த்தி செய்து அதை விருந்து வைத்துக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், இந்தச் செய்தி நிச்சயம் அந்த கூட்டணியின் தலைவர்களுக்கு கசப்பான ஒன்றாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. முதல் ஆட்சியையும் சேர்த்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செல்வாக்கு சரிந்து விட்டது, ஆட்சி மக்கள் ஆதரவை இழந்து விட்டது என்று இரண்டு கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பது நிச்சயம் காங்கிரஸுக்கும், அதன் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முதலில் ஏபிபி-நீல்சன் கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் மோடிதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரெல்லாம் மோடிக்குப் பின்னர்தான் வருகின்றனர். மேலும், மக்கள் ஆதரவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழந்து விட்டதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு ஆணித்தரமாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து சிஎன்என்-ஐபிஎன் கருத்துக் கணிப்பு வெளியானது. அதிலும் மோடிக்கே பெரும் ஆதரவு இருந்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு மக்கள் ஆதரவை இழந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மோடியை ஆதரித்து டிவிட்டரில் செய்திகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர் மோடி ஆதரவாளர்களும், பாஜகவினரும், பாஜக அனுதாபிகளும். கடந்த 12 மணி நேரமாக மோடி ஆதரவுக் குரல்களால் டிவிட்டர் அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
மோடிதான் சரியான மாற்றத்தைத் தருவார், மாற்றுத் தலைமையைத் தருவார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் குஜராத் மாநிலத்தில் மோடி ஏற்படுத்திய மாற்றங்களை, நிர்வாக சீர்திருத்தத்தை, மின்வெட்டில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு மோடியைப் புகழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு தற்போது பொருத்தமான தலைவர் மோடிதான் என்று பலரும் கூறியுள்லனர். மோடி பிரதமரானால், ராணுவத்துக்கு பெரும் கெளரவம்கிடைக்கும் என்று ஒருவர் எழுதியுள்ளார்.
மோடி பிரதமரானால் காந்தி கண்ட கனவான ராம் ராஜ்ஜியம் ஏற்படும் என்று ஒருவர் புகழ்ந்துள்ளார். இன்னொருவரோ, சர்தார் வல்லபாய் படேல் பிரதமரானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் மோடி பிரதமரானால் என்று சிலாகித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்களும் கூட மோடியைப் பற்றித்தான் தற்போது டிவிட்டரில் அதிக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனராம்.
Page 1 of 15508
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy